

திருவனந்தபுரம்,
கேரளத்தில் ஓணம் பண்டிகை வருகிற 26-ந் தேதி கொண்டா டப்படுகிறது. இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலம் இடுவது வழக்கம். இதற்கு வண்ண பூக்களை பயன்படுத்துகின்றனர். அஸ்த நட்சத்திர தினமான நேற்று அத்த சமய நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அதோடு ஓணம் பண் டிகை தொடங்குகிறது.
இதற்காக வீடுகளில் பெண்கள், குழந்தைகள் அத்தப்பூ கோலமிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு தேவையான பூக்களை வாங்குவதற்காக ஏராளமானோர் பூக்கடைகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் பூ மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக செண்டு மல்லி, செவ்வந்தி, அரளி, வாடாமல்லி பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆகிறது. ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை இந்த ஆண்டும் கிடு கிடு என உயர்ந்து உள்ளது.
அத்தப்பூ கோலமிட முக்கியமாக பயன்படுத்தப்படும் செண்டு மல்லி (ஆரஞ்சு நிறம்) பூக்கள் கிலோ ரூ.150 முதல் ரூ.300 வரையும், செண்டு மல்லி (மஞ்சள் நிறம்) ரூ.150 முதல் ரூ.250 வரையும், வெள்ளை நிற செவ்வந்தி ரூ.500 முதல் ரூ.700 வரையும், நீல நிற செவ்வந்தி பூக்கள் கிலோ ரூ.400 முதல் ரூ.700 வரையும் விற்பனை ஆகிறது. வாடாமல்லி கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையும், அரளிப்பூ ரூ.450 முதல் ரூ.500 வரையும், சிவப்பு ரோஜாப்பூ ரூ.400 முதல் ரூ.600 வரையும் விற்கப்படுகிறது.
அத்துடன் அத்தப்பூ அலங்காரத்திற்கு தேவையான இலைகளின் விலையும், தேவையும் அதிகரித்து உள்ளது. பன்னீர் இலை ஒரு கட்டு ரூ.110, கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி பெங்களூரு, கோவை, மைசூரு ஆகிய இடங்களில் இருந்து கொச்சிக்கு பல வண்ண பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சந்தையில் தேவை அதிகரித்து உள்ளதால், வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே மல்லிகை பூ விலையும் உயர்ந்து உள்ளது.