

திருவனந்தபுரம்,
கேரள மக்களின் முக்கிய அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் ஓணம் பண்டிகை கடந்த 16ம் தேதி தொடங்கியது. ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணம் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி கேரள போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாநில அரசு போனஸ் அறிவித்துள்ளது. அதன்படி, போக்குவரத்து துறையில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் தலா ரூ. 10 ஆயிரத்தை முன்பணமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிரந்தர ஊழியர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் போனஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தற்காலிக ஊழியர்களுக்கு தலா ரூ. 1 ஆயிரம் போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 42,549 ஓய்வூதியதாரர்களுக்கு தலா ரூ. 1,250 போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் தொகைக்காக ரூ. 33.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜான் தெரிவித்துள்ளார்.