

புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டப்பணிகள் தொடங்கிவிட்டனவா? அதற்கு 2020-2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும் கொள்கை எதுவும் அரசிடம் உள்ளதா? இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசை தமிழக அரசு அணுகியதா? அவ்வாறு செய்திருந்தால் அவை குறித்த விவரங்களை தெரிவிக்கவும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு, நீர்சக்தித்துறை இணை மந்திரி ரத்தன்லால் கட்டாரியா எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையின் வரைவு தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கையின் வரைவு நகலில் இடம்பெற்றுள்ள தகவல்களின்படி, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தால் தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 9.38 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடையும்.
இத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்தி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, உரிய அனுமதிகள் பெறப்பட்ட பிறகு, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டப்பணிகள் தொடங்கும். இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை விரைவாக தயாரிக்கும்படி மத்திய அரசை தமிழக முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், டாக்டர் அன்புமணி ராமதாஸ், காவிரி ஆற்றின் தூய்மை குறித்து எழுப்பிய மற்றொரு வினாவுக்கு பதிலளித்த மத்திய இணை மந்திரி ரத்தன்லால் கட்டாரியா, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 323 ஆறுகளில் 351 பகுதிகள் மாசு அடைந்திருக்கின்றன.
காவிரியில் கர்நாடக மாநிலத்தின் ரங்கன்திட்டு முதல் சத்தியமங்கலம் வரையிலான பகுதி, தமிழகத்தில் மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரையிலான பகுதிகள் மாசு அடைந்துள்ளன. பல்வேறு ஆறுகளை தூய்மைப்படுத்துவதற்காக பல்வேறு மாநில அரசுகளிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அவை மத்திய அரசின் ஆய்வில் உள்ளன என அவர் கூறியுள்ளார்.