

தாவணகெரே:
வாகன சோதனை
தாவணகெரே டவுனில் அரலிமரா சர்க்கிளில் தாவணகெரே டவுன் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக கே.ஏ.39 பி 8055 என்ற பதிவெண் கொண்ட ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் காரில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் காரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
ரூ.1.47 கோடி ஹவாலா பணம்
சோதனையில் காரில் இருந்த 3 பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதாவது ரூ.1 கோடியே 47 லட்சம் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த பணம் தொடர்பாக காரில் இருந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கலபுரகியில் இருந்து தாவணகெரேக்கு அந்த பணத்தை கடத்தி வந்ததும், அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும், அந்த பணம் ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து கலபுரகியை சேர்ந்த மகேஷ், பீரலிங்கா, ஸ்ரீகாந்த் ஆகியோரை கைது செய்தனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகேஷ் ஐதால் வந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
சம்பவம் தொடர்பாக தாவணகெரே டவுன் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கலபுரகியில் இருந்து தாவணகெரேவுக்கு காரில் எடுத்துச்செல்லப்பட்ட ஹாவாலா பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.