மராட்டியத்தில் ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து - 8 பேர் பலி

மராட்டியத்தில் ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புக்குழுவினர் தொழிற்சாலையில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, படுகாயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
வெடிவிபத்தின் சத்தம் 5 கிலோமீட்டர் தொலைவுவரை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






