'மீண்டும் ஒரு வாய்ப்பு': மருமகனின் பொது மன்னிப்பை ஏற்றுக்கொண்ட மாயாவதி

வெளிநபர்கள் அறிவுரைப்படி எந்த அரசியல் முடிவும் எடுக்கமாட்டேன் என ஆகாஷ் ஆனந்த் உறுதியளித்தார்.
'மீண்டும் ஒரு வாய்ப்பு': மருமகனின் பொது மன்னிப்பை ஏற்றுக்கொண்ட மாயாவதி
Published on

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, தனது சகோதரர் மகனான ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தனது அரசியல் வாரிசாகவும் நியமித்திருந்தார். ஆனால் மருமகனின் கட்சி விரோத நடவடிக்கைகளால் குறிப்பாக அவரது மாமனாருடன் சேர்ந்து கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்ததால் கடந்த மார்ச் மாதம், ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து நீக்கினார்.

இந்த நிலையில் ஆகாஷ் ஆனந்த் தனது செயலுக்கு நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'கட்சியில் இருந்து எனது நீக்கத்துக்கு காரணமான பதிவை எக்ஸ் தளத்தில் சில நாட்களுக்கு முன்பு போட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது உறவினர்கள் அல்லது வெளிநபர்கள் அறிவுரைப்படி எந்த அரசியல் முடிவும் எடுக்கமாட்டேன் என உறுதியளிக்கிறேன்' என குறிப்பிட்டு இருந்தார்.

ஆகாஷின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து மாயாவதி அறிவிப்பு வெளியிட்டார். தனது தவறை உணர்ந்து பொதுவெளியில் மன்னிப்பு கேட்டதால் ஆகாசுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குவதாக தனது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார். அதேநேரம் தான் ஆரோக்கியமாக இருக்கும் வரை, கட்சிக்கு எந்த வாரிசையும் நியமிக்கப்போவது இல்லை என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com