மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி! ஜனாதிபதியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

மேற்கு வங்காளத்தில் வன்முறை சம்பவம் தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி! ஜனாதிபதியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய அரசியலமைப்பின் 355-வது பிரிவை செயல்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது,

மேற்கு வங்காள மாநில அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மார்ச் 21, 2022 அன்று பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுய் கிராமத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில் துணை பஞ்சாயத்து தலைவர் பாது ஷேக் கொல்லப்பட்டார்.

இதற்குப் பதிலடியாக அப்பகுதியில் உள்ள வீடுகள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டன.

மார்ச் 21, 2022 அன்று நடைபெற்ற வன்முறையில் பெண்கள் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். அதில் பாதிக்கப்பட்ட அனைவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 26 அரசியல் கொலைகள் நடந்துள்ளன. மாநிலம் முழுவதும் அச்சம் மற்றும் வன்முறையின் பிடியில் சிக்கியுள்ளது.

மாநிலத்தில் அரசியல் சாசன இயந்திரம் சீர்குலைந்திருப்பது குறித்து தேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த தீவிரமான விஷயத்தை நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பினேன்.

மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பின் விதிகளின்படி மேற்கு வங்காள அரசு நடத்தப்படுவதை உறுதிசெய்ய, அரசியலமைப்பின் 355 வது பிரிவைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, பீர்பூம் வன்முறை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட் தாமாக முன்வந்து இன்று வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. சாட்சிகள் பாதுகாக்கப்படுவதையும், அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதையும், ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு மேற்கு வங்காள மாநில அரசுக்கு இன்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com