ஆன்லைன் மோசடி: ரூ.2 லட்சத்தை இழந்த நபர் - 2 மணிநேரத்தில் மீட்டு கொடுத்த போலீசார்போலீசார்

பாதிக்கப்பட்டவர் துரிதமாக செயல்பட்டு உடனே புகாரளித்ததால், சைபர் கிரைம் போலீசார் அந்த மோசடி கும்பலின் வங்கி கணக்கை உடனடியாக முடக்கினர்.
ஆன்லைன் மோசடி: ரூ.2 லட்சத்தை இழந்தவருக்கு 2 மணிநேரத்தில் மீட்டு கொடுத்த போலீசார்
ஆன்லைன் மோசடி
Published on

சித்தூர்,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியில் ஆன்லைன் மோசடியில் ரூ.2.22 லட்சத்தை இழந்தவருக்கு, புகாரளித்த 2 மணி நேரத்திற்குள் பணத்தை மீட்டு தந்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி நேரில் அழைத்து பாராட்டினார்.

இதுகுறித்து சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கி கணக்கில் பணம் திருட்டு

'சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியை சேர்ந்த ஒருவரின் செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்திவந்தது. அதில், அவரது டிராக்டருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த தகவலை அவர் பார்த்தபோது, அது போலி என்பது தெரிய வந்தது. ஆனால், சிறிது நேரத்திற்கு பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 54 திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சைபர் கிரைம்

உடனடியாக பாதிக்கப்பட்ட நபர், சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டதோடு, '1930' என்ற சைபர் கிரைம் இணைய குற்ற உதவி எண்ணிலும் உடனடியாக புகார் செய்தார்.

2 மணி நேரத்தில் மீட்பு

பாதிக்கப்பட்டவர் துரிதமாக செயல்பட்டு உடனே புகாரளித்ததால், சைபர் கிரைம் போலீசார் அந்த மோசடி கும்பலின் வங்கி கணக்கை உடனடியாக முடக்கினர். இதனால், திருடப்பட்ட ரூ.2.22 லட்சம் பணம், புகாரளித்த 2 மணி நேரத்திற்குள்ளாகவே முழுமையாக மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்ட சோமலா போலீசாரையும், சைபர் கிரைம் பிரிவினரையும் பாராட்டுகிறேன்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்கள் யாராவது இதுபோன்று ஆன்லைன் பண மோசடி வலையில் விழுந்து பணத்தை இழக்க நேரிட்டால், பதற்றமடையாமல் உடனடியாக '1930' என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்க வேண்டும். மோசடி கும்பலின் வங்கி கணக்குகளுக்கு பணம் சென்றடைந்த உடனே புகார் அளிக்கப்பட்டால், அந்த பணத்தை உடனடியாக முடக்கி மீட்டு கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் அபராத தகவல்கள், பரிசு விழுந்திருப்பதாக வரும் லிங்குகள் அல்லது சந்தேகத்திற்குரிய செயலிகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்யவோ, பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம்.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com