

புதுடெல்லி,
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தவும், மேம்படுத்தவும் ஆன்லைன் கேமிங் ஆணையம் அமைக்கப்படும் என மத்திய அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த 2025-ம் ஆண்டு ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தக்கூடிய சட்டத்தை நாடாளுமற்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.
அந்த சட்டத்தின்படி இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த சட்டத்தின் அடிப்படையில் தற்போது ‘ஆன்லைன் கேமிங் அத்தாரிட்டி ஆப் இந்தியா’ என்ற ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
ஆன்லைன் கேமிங் துறையில் நிலவும் சிக்கல்களை தீர்க்கவும் முறையான வழிகாட்டுதலை வழங்கவும் இந்த உயர்மட்ட ஆணையத்தை மத்திய அரசு அமைத்திருக்கிறது. இந்த ஆணையம் 6 முக்கியமான அதிகாரிகளை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் இணை செயலாளர்களும் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆன்லைன் விளையாட்டுகளில் நடைபெறக்கூடிய நிதி மோசடி, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாதல் மற்றும் சட்டவிரோத சூதாட்டங்களை தடுப்பது இந்த ஆணையத்தின் மிக முக்கியமான நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆணையத்தின் வருகை இந்தியாவில் உள்ள ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளையும், பயனாளர்களுக்கு பாதுகாப்பான சூழலையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.