பா.ஜ.க.வால் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் - பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் இறுதி மூச்சை எடுத்துக்கொண்டிருப்பதாக தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பா.ஜ.க.வால் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் - பிரதமர் மோடி
Published on

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீரில் வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும். இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ..க வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெகா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, "ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தனது இறுதி மூச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த அழகான பிராந்தியத்தை அழித்த குடும்ப அரசியலை எதிர்கொள்ள ஒரு புதிய தலைமையை முன்வைத்துள்ளது. நாங்களும், நீங்களும் இணைந்து ஜம்மு காஷ்மீரை நாட்டின் பாதுகாப்பான மற்றும் வளமான பகுதியாக மாற்றுவோம். பா.ஜ.க.வால் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும்.

சுதந்திரத்திற்குப் பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீர் அந்நிய சக்திகளின் இலக்காக மாறியது . வாரிசு அரசியல் இந்த அழகான பகுதியை வெறுமையாக்கியது. வம்சாவளி அரசியல் ஆளுமைகள், தங்கள் வாரிசுகளை முன்னிறுத்தி புதிய தலைமையை வளர விடாமல் செய்து விட்டனர். 2014ம் ஆண்டு மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இளம் தலைமைத்துவத்தை உருவாக்குவதில் எங்கள் அரசாங்கம் தனிகவனம் செலுத்தியது" என்று அவர் கூறினார்.

1982-ம் ஆண்டுக்குப் பிறகு தோடா மாவட்டம் செல்லும் முதல் பிரதமர், மோடி ஆவார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், குறிப்பாக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் இடத்தில் பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜம்முவில் பா.ஜ.க. 43 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. 25 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com