

கோடிகளில் சம்பாதிக்கும் மோடி நண்பர்கள்
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் (உத்தரபிரதேசம்) விவசாயிகளுக்கு நியாயம் கேட்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பங்கேற்றார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கு விற்கிறது. கியாஸ் சிலிண்டர் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதை பற்றி அரசுக்கு கவலை இ்ல்லை.
வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது. மக்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியின் நண்பர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள். விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அவருடைய நண்பர்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.
ஏர் இந்தியா விற்பனை
பிரதமர் மோடி தனது பயன்பாட்டுக்காக 2 விமானங்கள் வாங்கினார். அவற்றில் ஒரு விமானத்தை ரூ.8 ஆயிரம் கோடிக்கு விற்றார். ஏர் இந்தியாவை ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்றார்.நாடு சீரழிக்கப்படுகிறது. அதை புரிந்து கொள்ளுங்கள். உண்மையை பேச பயப்படாதீர்கள். இது உங்கள் நாடு. மோடியின் சொத்து அல்ல. எந்த சாதி, மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பாதுகாப்பாக இல்லை.பிரதமர் மோடி, அவருடைய மந்திரிகள், ஆளுங்கட்சியினர், அவர்களுடைய கோடீஸ்வர நண்பர்கள் ஆகியோர் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர். தலித்துகள், பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
சிறையில் இருந்தபடியே போராடுவேன்
லகிம்பூர் சம்பவம் தொடர்பாக, மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும். என்னை ஜெயிலில் போடட்டும். அவர் ராஜினாமா செய்யும்வரை சிறையில் இருந்தபடியே போராடுவேன். நான் லகிம்பூர் சென்றபோது, போலீசார் தடுத்தனர். ஆனால் குற்றவாளிகளை பிடிக்க செல்லவில்லை. உலகம் முழுக்க செல்லும் மோடியால், விவசாயிகளை பார்க்க முடியவில்லை. இமாசலபிரதேசத்தில் கடந்த ஆண்டு கிலோ ரூ.88 வீதம் ஆப்பிள்களை பிரதமரின் கோடீஸ்வர நண்பர்கள் வாங்கினர். இந்த ஆண்டு ரூ.77-க்கு வாங்குகிறார்கள். அவர்கள் வைத்ததுதான் விலை. இது விவசாயிகளுக்கு நல்லது செய்யுமா? கடந்த 7 ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்துள்ளதா? இல்லை எனில், என்னோடு தோளோடு, தோள் சேர்த்து, இந்த அரசை மாற்ற வாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, காசி விஸ்வநாதர் கோவிலில் பிரியங்கா சாமி தரிசனம் செய்தார்.