'கொரோனாவில் இருந்து கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும்’ கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி கருத்து

கர்நாடகாவில் அடுத்த இரண்டு மாதங்களில் கொரோனா பாதிப்புகள் உயரும் என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.
'கொரோனாவில் இருந்து கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும்’ கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி கருத்து
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 3,176 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,253 ஆக அதிகரித்து.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் இந்திய அளவில் கர்நாடகா 4-வது இடத்திற்கு வந்துள்ளது. பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 1,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பெங்களூருவில் ஏற்கனவே 22 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துக்கொண்டே செல்லும் நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து கடவுள்தான் நம்மை காப்பாற்ற முடியும் என்று கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமலு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், இன்னும் இரு மாதங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும். நம்மை யார் காப்பாற்றுவது? கடவுள்தான் நம்மைக் காக்க வேண்டும்' என்று பதிவிட்டார்.

மேலும் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஸ்ரீராமலு, உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆளும் கட்சி நபராக இருந்தாலும் சரி , எதிர்க்கட்சி நபராக இருந்தாலும் சரி , பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், இந்த வைரஸ் எந்த வித பாரபட்சத்தையும் காட்டாது.

அடுத்த இரண்டு மாதங்களில் மட்டுமே கொரோனா பாதிப்புகள் உயரும் என நான் நம்புகிறேன். அரசின் அலட்சியத்தால் வைரஸ் பரவல் வேகமெடுக்கிறது என்று யாராவது கூறினால் அது முற்றிலும் தவறான தகவலாகும். கொரோனாவில் இருந்து கடவுளால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com