

டார்ஜிலிங்,
மேற்கு வங்காளத்தில் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்க்காலாந்து என தனி மாநிலம் உருவாக்கக்கோரி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா என்ற அமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் நீண்ட போராட்டங்கள் நடந்தன. இதில் ஏற்பட்ட வன்முறையில் பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.
இந்த வன்முறை தொடர்பாக அமைப்பின் தலைவர் பிமல் குருங் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சிக்கிமில் தலைமறைவாக வாழ்ந்து வந்த இவர் டார்ஜிலிங் பகுதிக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாலையில் டார்ஜிலிங் அருகே உள்ள காட்டுப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது குருங்கின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் அமிதபா மாலிக் என்ற சப்இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 போலீசார் காயமடைந்தனர். பின்னர் குருங்கின் ஆதரவாளர்கள் தப்பி ஓடினர். சம்பவ இடத்தில் இருந்து 6 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்பட சில ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவத்தில் தங்கள் ஆதரவாளர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூர்க்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பும் தெரிவித்து உள்ளது. ஆனால் இது குறித்து போலீசார் தரப்பில் எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் டார்ஜிலிங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.