ஜம்மு பிராந்தியத்தின் எல்லையோர மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

ஜம்மு பிராந்தியத்தின் எல்லையோர மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன.
ஜம்மு பிராந்தியத்தின் எல்லையோர மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
Published on

ஜம்மு,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலம் இரண்டாக பிரிப்பு போன்ற நடவடிக்கைகளால் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. இதில் காஷ்மீரில் தொடர்ந்து அமைதியின்மை காணப்படும் நிலையில், ஜம்மு பிராந்தியம் மெல்ல மெல்ல சுமுக நிலையை எட்டி வருகிறது.

ஜம்முவில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் திறந்திருக்கின்றன. சாலையில் வாகன போக்குவரத்து காணப்படுகிறது. மேலும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ஜம்மு, கதுவா, சம்பா, உதம்பூர் மற்றும் ரியாசி ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 10-ந்தேதியே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள ரஜோரி, பூஞ்ச், ராம்பன், தோடா மற்றும் கிஸ்த்வார் ஆகிய எல்லையோர மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. குறிப்பாக ரஜோரி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூஞ்ச் மாவட்டத்தில் மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தவிர மீதமுள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் நேற்று திறந்திருந்தன. எனினும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதைப்போல ராம்பன், தோடா மாவட்டங்களிலும், கிஸ்த்வாரின் பெரும்பாலான பகுதிகளிலும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு இருந்தன.இதைப்போல ஸ்ரீநகரிலும் பள்ளிகள் திறந்திருந்தன. ஆனாலும் மாணவர்கள் யாரும் வராததால் வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதற்கிடையே காஷ்மீரில் பதற்ற நிலை நீடிப்பதால், அங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கின்றன. கடைகள் அடைக்கப்பட்டு, வாகன இயக்கம் முடங்கி உள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அங்கு ஊரடங்கு, 144 தடை உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.

காஷ்மீரில் தற்போது பாரம்பரிய திருமண காலம் ஆகும். ஆனால் அங்கு அமலில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் இந்த திருமணங்கள் பெரும்பாலும் ரத்து செய்யப்படுகின்றன, அல்லது எளிமையாக நடத்தப்படுகின்றன.

இந்த திருமண ரத்து தகவலை வெளியிடுவதற்காக அங்கு வெளிவரும் சிறிய பத்திரிகைகள் இலவசமாக பக்கங்களை ஒதுக்கி உள்ளன. அவற்றில் தினந்தோறும் 25-க்கும் மேற்பட்ட திருமண ரத்து விளம்பரங்கள் வெளியாகின்றன. இதைப்போல உள்ளூர் தொலைக்காட்சிகளும் இலவசமாக இந்த செய்திகளை வெளியிடுகின்றன.

இந்த திருமண ரத்து நடவடிக்கைகளால் இறைச்சி வியாபாரிகள், சமையல்காரர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் என ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும் இந்த திருமண காலத்தில் நடைபெறும் பல வியாபாரங் கள் பாதிப்படைந்து இருக்கின்றன.

இது குறித்து திருமண சமையல்காரர் ஒருவர் கூறுகையில், பொதுவாக இந்த நாட்களில் நடைபெறும் திருமணங்களில் சராசரியாக 600 முதல் 800 வரையிலான நபர்கள் பங்கேற்பார்கள். ஆனால் தற்போது பெரும்பாலான திருமணங்கள் ரத்து செய்யப்படுகின்றன. நடைபெறும் திருமணங்களும் மிகவும் எளிமையாக நடத்தப்படுகின்றன. அவற்றில் நெருங்கிய உறவினர்கள் சுமார் 150 முதல் 200 பேர் வரை பங்கேற்கிறார்கள். இதனால் எங்கள் வருமானம் 70 சதவீதத்துக்கும் மேல் குறைந்திருக்கிறது என்று வருத்தத்துடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com