ஆபரேஷன் சிந்தூர் - 9 விமானப்படை அதிகாரிகளுக்கு ‘வீர் சக்ரா’ விருது

‘வீர் சக்ரா’ விருது என்பது மூன்றாவது மிக உயர்ந்த போர்க்கால வீரப்பதக்கம் ஆகும்.
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
அதைத் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்தது. இதையடுத்து தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 விமானப்படை அதிகாரிகளுக்கு ‘வீர் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஸ்பார்டன் லீடர்கள் சார்தக் குமார், சித்தார்த் சிங், ரிஸ்வான் மாலிக், விங் கமாண்டர் ஜாய் சந்திரா, பிளைட் லெப்டினண்ட் ஆர்ஷ்வீர் சிங் தாக்கூர், குரூப் கேப்டன்கள் ரஞ்சித் சிங் சித்து, மனிஷ் அரோரா, அனிமேஷ் பத்னி மற்றும் குணால் கல்ரா ஆகியோருக்கு ‘வீர் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வீர் சக்ரா’ விருது என்பது மூன்றாவது மிக உயர்ந்த போர்க்கால வீரப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.






