ஆபரேசன் சிந்தூர் 2.0 தேவைப்பட்டால்... முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன: ராணுவ தலைமை தளபதி பேச்சு

வருங்கால போர்களானது, விண்வெளி, சைபர் தாக்குதல்கள் மற்றும் அறிவுசார் தாக்குதல்கள் தொடர்பாக அதிகரித்து காணப்படும்.
ஆபரேசன் சிந்தூர் 2.0 தேவைப்பட்டால்... முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன:  ராணுவ தலைமை தளபதி பேச்சு
Published on

புனே

மராட்டியத்தில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் நடந்த நிகழ்ச்சியையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவிவேதி கலந்து கொண்டு இன்று பேசினார். அப்போது அவர் நிலம், வான் மற்றும் கடல் ஆகியவற்றை கடந்து நவீன முறையில் செயல்பட கூடிய வகையில் நம்முடைய முப்படைகளின் கூட்டு சக்தி உள்ளது என்று கூறினார்.

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இதனை குறிப்பிட்டு அவர் தொடர்ந்து பேசும்போது, ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையானது தொடர்ந்து நீடிக்கிறது. தற்காலிக அடிப்படையில் தாக்குதல் நிறுத்தப்பட்டு உள்ளது.

அதனால், ஆபரேசன் சிந்தூர் 2.0 நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை ஏற்பட்டால், முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன என்று கூறினார். வருங்கால போர்களானது, விண்வெளி, சைபர் தாக்குதல்கள் மற்றும் அறிவுசார் தாக்குதல்கள் தொடர்பாக அதிகம் காணப்படும். நவீன போர் களங்கள் மிக வெளிப்படையாக உள்ளன.

ஒவ்வொருவரின் நடவடிக்கையும் மற்றவருக்கு நன்றாக தெரிகிறது. அதனால், நம்முடைய படை குவிப்பு, ராணுவத்தில் ஆள் சேர்ப்பு மற்றும் எல்லை பகுதிகளில் உள்ள நம்முடைய படையினர் மற்றும் குடிமக்களை பாதுகாப்பது ஆகியவற்றில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com