‘ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் உறுதியான தீர்மானத்திற்கு எடுத்துக்காட்டு’ - உபேந்திர திவேதி


‘ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் உறுதியான தீர்மானத்திற்கு எடுத்துக்காட்டு’ - உபேந்திர திவேதி
x
தினத்தந்தி 14 Jan 2026 4:46 PM IST (Updated: 14 Jan 2026 4:47 PM IST)
t-max-icont-min-icon

இளைஞர்கள் ஆயுதப் படைகளில் சேர்வதற்கு என்.சி.சி. ஒரு சிறந்த பாதையாக உள்ளது என உபேந்திர திவேதி தெரிவித்தார்.

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய திடீர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தான் மாற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு ராணுவங்கள் இடையே மோதல் வெடித்தது. பின்னர், இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப்பின் மோதல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இந்தியாவின் உறுதியான தீர்மானத்திற்கு எடுத்துக்காட்டு என ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நடைபெற்ற என்.சி.சி. குடியரசு தின முகாமில் உபேந்திர திவேதி பேசியதாவது;-

“இந்தியாவின் உறுதியான தீர்மானம் மற்றும் கட்டுப்பாட்டிற்கான எடுத்துகாட்டாகவும், நமது ஆயுதப் படைகள் மற்றும் நமது இளைஞர்களின் தார்மீக வலிமை மற்றும் தொழில்முறை திறமையின் பிரதிபலிப்பாகவும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ இருந்தது.

இந்த நடவடிக்கையின் போது, ​​நாடு முழுவதும் 75,000-க்கும் மேற்பட்ட என்.சி.சி. கேடட்கள் தன்னார்வலர்களாக, சிவில் பாதுகாப்பு, மருத்துவமனை மேலாண்மை, பேரிடர் நிவாரணம் மற்றும் சமூக சேவைகளில் அயராது உழைத்தனர்.

சமீபத்திய நிகழ்வுகள் இந்திய இளைஞர்களின் திறன் என்ன என்பதைக் காட்டுகின்றன. நமது இளைஞர்கள் ஒழுக்கம், லட்சியம் மற்றும் தேசிய அர்ப்பணிப்புடன் வழிநடத்தப்பட வேண்டியவர்கள். இளைஞர்கள் ஆயுதப் படைகளில் சேர்வதற்கு என்.சி.சி. ஒரு சிறந்த பாதையாக உள்ளது.

வளர்ந்த இந்தியா 2047 என்ற இலக்கை அரசாங்கத்தால் மட்டுமே அடைந்துவிட முடியாது. இளம் தலைவர்கள், என்.சி.சி. கேடட்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் பொறுப்புள்ள குடிமக்களால் அது சாத்தியமாகும்.

எனவே, நம்பிக்கையுடன் பயணிப்போம், ஒழுக்கத்துடன் அணிவகுத்துச் செல்வோம், நேர்மையுடன் புதுமை செய்வோம், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம். மேலும் நாம் தேடும் எதிர்காலத் தலைவர்களாக இருப்போம். நாம் ஒரு வலுவான, சுயசார்புடைய, ஒன்றுபட்ட மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story