ஆபரேஷன் திராஷி: பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படை தீவிரம்

காஷ்மீரில் நடந்து வரும் துப்பாக்கி சண்டையில், 3 பயங்கரவாதிகள் படையினரிடம் சிக்கியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபரேஷன் திராஷி: பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படை தீவிரம்
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ நகரில் சிங்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

ஆபரேஷன் திராஷி என்ற பெயரில் நடந்து வரும் இந்த மோதலில், கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான பணியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனை ஒயிட் நைட் படையினர் வெளியிட்ட எக்ஸ் ஊடக பதிவு தெரிவிக்கின்றது.

இதில், 3 பயங்கரவாதிகள் சிக்கியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில், சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியான சம்பவத்திற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது.

இதில், பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, தெற்கு காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் கவனம் திரும்பியுள்ளது. கடந்த வாரத்தில் கடைசி 3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலில், ஆபரேஷன் திராஷி என்ற பெயரிலான நடவடிக்கையை பாதுகாப்பு படை முன்னெடுத்து உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சில நாட்களில் இந்த என்கவுன்ட்டர் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com