கேரள அமைச்சரவையில் புது முகங்களுக்கு வாய்ப்பு: முதல் மந்திரி மருமகனுக்கும் இடம்

கேரள அமைச்சரவையில் முதல்-மந்திரி மருமகன் உள்பட புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
கேரள அமைச்சரவையில் புது முகங்களுக்கு வாய்ப்பு: முதல் மந்திரி மருமகனுக்கும் இடம்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி 99 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதனால், பினராயி விஜயன் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதனை தொடர்ந்து கேரள சட்டசபை அமைச்சரவை பதவியேற்பு விழா, வருகிற 20ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு தமது அரசின் பதவியேற்பு விழாவில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும், அதே மைதானத்தில் 20ந்தேதி நடக்கவிருக்கும் அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு இன்று கூடி, கேரளாவின் முதல்-மந்திரி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக பினராயி விஜயனை தேர்வு செய்தது.

முதல்-மந்திரியின் அமைச்சரவை பட்டியலில் எம்.வி. கோவிந்தன், கே. ராதாகிருஷ்ணன், கே.என். பாலகோபால், பி. ராஜீவ், வி.என். வாசவன், சாஜி செரியன், வி. சிவன்குட்டி, முகமது ரியாஸ், டாக்டர் ஆர். பிந்து, வீணா ஜார்ஜ் மற்றும் வி. அப்துல் ரகுமான் ஆகியோர் அடங்குவர்.

இவர்களில் முகமது ரியாஸ் முதல்-மந்திரியின் மருமகன் ஆவார்.

இந்த அமைச்சரவையில் இதற்கு முன்பிருந்த ஆட்சியில் இடம் பெற்ற மந்திரிகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் சுகாதார மந்திரியாக இருந்த சைலஜாவும் இடம் பெறவில்லை. அவருக்கு கட்சி கொறடா பதவி வழங்கப்பட்டு உள்ளது.

கட்சியை சேர்ந்த எம்.பி. ராஜேஷ் சபாநாயகராகவும், டி.பி. ராமகிருஷ்ணன் நாடாளுமன்ற கட்சி செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கட்சியில் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று அக்கட்சி தலைவர் ஏ.என். ஷம்ஷீர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com