வடகிழக்கு மாநிலங்களை சுற்றிப்பார்க்க வாய்ப்பு - இந்திய ரெயில்வே ஏற்பாடு

டெல்லியில் இருந்து அசாம், அருணாசலபிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை சுற்றிப்பார்க்க இந்திய ரெயில்வே வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களை சுற்றிப்பார்க்க வாய்ப்பு - இந்திய ரெயில்வே ஏற்பாடு
Published on

புதுடெல்லி,

'அசாமின் கவுகாத்திக்கு அப்பால்…' என்கிற கருத்தியலில் இந்திய ரெயில்வேயின் பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரெயில் வருகிற 21-ந் தேதி 5 வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த ரெயில் டெல்லி சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். முதலில் கவுகாத்தியில் நிற்கும். அங்கு காமாக்யா கோவில், உமானந்தா கோவில் தரிசனங்களுக்குப் பிறகு பயணிகள் பிரம்மபுத்திராவில் சூரிய அஸ்தமனத்தை பார்க்கலாம்.

அதன்பிறகு அருணாசலபிரதேசத்தின் தலைநகரான இட்டாநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள நகர்லாகுனுக்கு ரெயில் செல்லும். தொடர்ந்து சிவசாகர், சிவடோல் மற்றும் பாரம்பரிய தலங்களுக்குச் செல்லும். அதன்பிறகு ஜோர்ஹாட்டில் உள்ள தேயிலை தோட்டங்களைப் பார்க்கலாம். அதன்பிறகு காசிரங்கா தேசிய பூங்காவில் பயணிக்கலாம்.

அதைத் தொடர்ந்து திரிபுரா மாநிலத்துக்கு ரெயில் புறப்படும். அங்கு புகழ்பெற்ற உஜ்ஜயந்தா அரண்மனை, உனகோடி மற்றும் அகர்தலாவின் புகழ்பெற்ற பாரம்பரிய தலங்களை பார்க்கலாம். பின்னர் மேலும் சில இடங்களுக்குச் சென்றுவிட்டு, நாகாலாந்து மாநிலத்தின் திமாபூருக்கு ரெயில் செல்லும். அங்கிருந்து கோகிமாவுக்கு பயணிகள் பஸ்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் ஷில்லாங்குக்கும், அதைத் தொடர்ந்து சிரபுஞ்சிக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

15 நாட்கள் பயணிக்கும் இந்த சுற்றுலாவின் முழு பயண தூரம் சுமார் 5 ஆயிரத்து 800 கி.மீ. ஆகும். ரெயிலில் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன. கட்டணத்தைப் பொறுத்தவரை இரு அடுக்கு ஏ.சி.க்கு நபர் ஒருவருக்கு ரூ.1,06,990-ம், முதல் வகுப்பு ஏ.சி.க்கு ரூ.1,31,990-ம், ஏ.சி. கூபேக்கு ரூ.1,49,290-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது உணவு, தங்குமிடம் உள்பட அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com