கொரோனாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளையெல்லாம் எதிர்ப்பதா? காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம்

கொரோனா வைரசுக்கு எதிரான அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும், காங்கிரசின் திவாலான தலைமை எதிர்ப்பதா? என பாரதீய ஜனதா கட்சி சாடி உள்ளது.
கொரோனாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளையெல்லாம் எதிர்ப்பதா? காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம்
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்த நோய் பரவுவது ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் காங்கிரஸ் கட்சி குறைகூறி வருகிறது. விமர்சனங்களை முன் வைக்கிறது. எதிர்க்கருத்துக்களை தெரிவிக்கிறது. இது மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது. ஆனால் மோடியையும், மத்திய அரசையும் குறைகூறி சண்டைபோடுவதில்தான் காங்கிரஸ் கட்சி மும்முரமாக உள்ளது.

ஏழைகள் அரசு ஊழியர்கள் அல்லது மற்றவர்கள் என சமூகத்தில் அனைவருமே கொரோனா வைரசை எதிர்த்து ஒற்றுமையாக போராடி வருகிறார்கள். பிற நாடுகளை விட, இந்த பிரச்சினையை நமது நாடு சிறப்பான விதத்தில்தான் கையாண்டு வருகிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைமை திவாலாகி விட்டது. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தினமும் அது எதிர்த்து வருகிறது. காங்கிரஸ் கட்சி நாட்டின் நாடித்துடிப்பையும், மனநிலையையும் புரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தியையும், அவரது குழுவையும் தவிர்த்து யாரும் அரசை எதிர்க்கவில்லை.

மக்கள் அனைவரும் அரசுடன் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மீது அவர்கள் கோபம் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒன்றுபட்டு நிற்கிறபோது, காங்கிரஸ் கட்சி மட்டும் ஏன் எதிர்த்து நின்றது என்பதற்கு அந்த கட்சி ஒரு நாள் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். இவவாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

முன்னதாக கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் பெரும்தொகை தேவைப்படுவதால் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது உணர்வில்லாதது, மனிதாபிமானமற்றது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com