

புதுடெல்லி,
ஜார்கண்டில் இறைச்சி விற்பனையாளரை கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்த காட்சி வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயந்த் சின்ஹா தனது செயலுக்கு பின்னர் மன்னிப்பு கோரி விட்டார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய மந்திரியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
அவையில் விமான நிலையங்களை மேம்படுத்துவது பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்க மந்திரி சின்ஹா எழுந்தபொழுது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்ப தொடங்கினர்.
அவர்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு மாலை அணிவிப்பது நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.
எனினும், சின்ஹா தொடர்ந்து பேசினார். அவரது பதில் உரை முடிந்ததும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மைய பகுதியில் இருந்து திரும்பி சென்றனர்.