நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முறையான ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கி உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசு உரிய பதிலளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.






