நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு ஒரு நன்கொடைப் பெட்டியை வைத்து, அதைச் சுற்றி நின்று அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டு வருகிறது. நடப்பு கூட்டத்தொடரில் இதுவரை மக்களவையில் கேள்வி நேரம் முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இன்று மக்களவை கூடியபோது, நீட் முறைகேடு விவகாரம், மாணவர் போராட்டங்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்களவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு கையில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது தடியடி நடத்திய விவகாரம், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு ஆகியவற்றை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், ராமர் கோயில் நன்கொடைகள் திருடப்பட்டதை குறிக்கும் வகையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு நன்கொடைப் பெட்டியை வைத்து, அதைச் சுற்றி நின்று அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோரிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டு வரும் நிலையில், கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியிலேயே சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com