

புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வருகிற ஆகஸ்டு 13ந்தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடர் இன்று 2வது நாளாக கூடியது.
இதில், பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நேற்று கூட்டம் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவை தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று காலை முதலே எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 2 மணிவரை தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் சபை கூடியதும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
அதேபோல, மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்தனர். மீண்டும் கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு கொரோனா தொடர்பான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 1 மணிக்கு மேல் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவை நடைபெற்றது. காகிதங்களை கிழித்தெறிந்தும், பதாகைகளை ஏந்தியும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்கட்சியினரின் தொடர் அமளியால் மாநிலங்களவை மீண்டும் மதியம் 1.34 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாநிலங்களவை மூன்றாவது முறையாக மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் கூடிய அவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராஜ்ய சபை வருகிற 22ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.