எதிர்க்கட்சிகள் அமளி - மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் அமளி - மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைள் முடங்கி வருகிறது. அந்த வகையில் இன்றும் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், 7-வது நாளாக அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியது.

நம்பிக்கையில்லா தீர்மானம் எப்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மக்களவையில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா பல்வேறு கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்ததால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதை போலவே மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தன. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன் ஆவேசமாக பேசினார்.

அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்த மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார். மேலும் சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com