எனது தாயை எதிர்க்கட்சிகள் அவமதித்துவிட்டன - பிரதமர் மோடி வேதனை


எனது தாயை எதிர்க்கட்சிகள் அவமதித்துவிட்டன - பிரதமர் மோடி  வேதனை
x
தினத்தந்தி 2 Sept 2025 2:32 PM IST (Updated: 3 Sept 2025 8:35 AM IST)
t-max-icont-min-icon

என் தாயை மட்டும் அவமதிக்கவில்லை, இந்த நாட்டின் தாய்மார்கள், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பீகாரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:-

ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தின்போது, எனது தாயை எதிர்க்கட்சிகள் அவமதித்து விட்டனர். 'இந்தியத் தாயை' அவமதிப்பவர்களுக்கு என் அம்மாவை திட்டுவது ஒரு பொருட்டே அல்ல, அத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என் தாயை இழிவாகப் பேசிய போது, என் இதயம் எவ்வளவு காயமடைந்ததோ, அதைவிட பீகாரில் உள்ள பெண்கள், அதைக் கேட்டு எந்த அளவுக்கு வலியை சுமந்தீர்கள் என்று எனக்குத் தெரியும்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தையும் காங்கிரஸ் கட்சியையும் நான் மன்னித்துவிடுவேன், ஆனால், எனது தாயை இழிவாகப் பேசியவர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சி, பெண்களால்தான் கவிழ்க்கப்பட்டது என்பதால், அக்கட்சி பெண்களை பழிவாங்குகிறது. எனது தாயை இழிவாகப் பேசியவர்களின் மனநிலையே, பெண்கள் என்றாலே பலவீனமானவர்கள் என்பதுதான்.

அரசியலுக்கும் எனது தாய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருக்கும்போது, ராஷ்ஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் நடத்திய வாக்காளர் அதிகார யாத்திரையில், எனது தாயைப் பற்றி பேச வேண்டியதன் அவசியம் என்ன? பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்கிரஸ் எப்போதும் அவமதிக்கிறது. பெண்கள் மீதான இந்த வெறுப்பு அரசியலை நிறுத்துவது மிகவும் முக்கியம். ராஷ்ஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் செய்யும் அட்டூழியங்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த வாரம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் சார்பில் பீகாரில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரையின்போது, தலைவர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வராத நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மைக்கில், பிரதமர் மோடியின் தாயைப் பற்றி கருத்துக் கூறியிருந்தது பேசுபொருளாகியிருந்த நிலையில், அது பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

1 More update

Next Story