எதிர்க்கட்சிகள் அமளி; பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகள் அமளி; பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு
x

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிற எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றாக திரண்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 21-ந்தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது.

இந்நிலையில், 4-வது நாளாக அவை இன்று கூடியதும் இரு அவைகளை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் உடனடியாக அவையை ஒத்திவைத்து விட்டு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவாதிக்க கோரியும் அவையில் நோட்டீஸ் அளித்தனர்.

கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து, இரு அவைகளிலும் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பற்றி எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி வருகின்றன.

இந்த எஸ்.ஐ.ஆர். விவகாரத்தின்படி, பீகாரில் வாக்காளர் பட்டியலில் மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஒரு வெளிப்படையான, சுதந்திர மற்றும் சிறந்த முறையிலான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதில் இந்த பட்டியல் முக்கியத்துவம் பெறுகிறது.

இதன்படி, குடிமக்கள் அல்லாதோர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களும், பிரிவு 19-ன்படி பட்டியலில் சேர்க்க அனுமதிக்கப்படுவர்.

நேற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தரப்பில் இதுபோல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்களுடைய நோட்டீஸ்கள் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இன்று காலை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை அவை கூடியதும் மீண்டும் அதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும், கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் முன்னாள் இடைக்கால தலைவரான சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிற எம்.பி.க்கள் ஒன்றாக திரண்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி 3 நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்நிலையில், இன்றும் அவை நடவடிக்கைகள் முடங்கின. மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story