மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக வந்தனா சவுகான் தேர்வு

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக வந்தனா சவுகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #VandanaChavan
மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக வந்தனா சவுகான் தேர்வு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது.

தற்போது காலியாக இருக்கும் அந்த பதவிக்கு நடப்பு கூட்டத்தொடரில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த தேர்தல் நாளை மறுநாள் (9ந் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறும் என அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார். இந்த தேர்தலுக்கான வேட்புமனு 8ந் தேதி (நாளை) முற்பகலுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த பதவியை கைப்பற்ற பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதாதளக் கட்சியை சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜனதா இருந்தபோதும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. எனவே பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெற பா.ஜனதா முனைப்பு காட்டி வருகிறது.

இதைப்போல சுமார் 40 ஆண்டுகளாக இந்த பதவியை கைவசம் வைத்திருந்த காங்கிரஸ் கட்சியும், மீண்டும் அதை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அதேநேரம் கடந்த மாதம் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பொது வேட்பாளர் நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி தேசியவாத காங்கிரஸ் எம்.பி. வந்தனா சவானை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொது வேட்பாளராக நிறுத்த பரிசீலனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. இப்போது அவரே வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 123 என்ற மெஜாரிட்டி இலக்கை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நெருங்கியுள்ளது.

பா.ஜனதா கூட்டணிக்கு 93 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு 116 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணியை சேராத அதிமுக (13), பிஜு ஜனதா தளம் (9), தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (6), சிவசேனா (3), பிடிபி (2) ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (2) ஆகிய கட்சிகளுக்கு 35 உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளது. பிஜு ஜனதா தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் வாக்குகள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் வரிசையில் இரு கட்சிகளையும் இழுக்கும் பணிகள் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com