நீக்கப்பட்ட கருத்தை வெளியிட்ட மீடியாக்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

பாராளுமன்றத்தில் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்தை வெளியிட்ட மீடியாவிற்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
நீக்கப்பட்ட கருத்தை வெளியிட்ட மீடியாக்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் கும்பல் தாக்குதல் தொடர்பாக புதன் கிழமை மாநிலங்களவையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. நரேஷ் அகர்வால் பேசுகையில், இந்துக் கடவுள்களை மதுவுடன் ஒப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவையில் இருந்த அருண் ஜெட்லி உள்பட பா.ஜனதா எம்.பி.க்கள் அவருடைய பேச்சுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது, அவையை ஒத்திவைக்கவும் நேரிட்டது. இதனையடுத்து தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நரேஷ் அகர்வால். இதனையடுத்து அவருடைய கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் கூறினார்.

இந்நிலையில் அவருடைய கருத்துக்கள் மீடியாக்கள் வெளியாகியதாக கூறப்படுகிறது. நரேஷ் அகர்வாலின் பேச்சுக்கு எதிராக பா.ஜனதாவின் இளைஞர் பிரிவு போராட்டம் நடத்தியது, நரேஷ் அகர்வால் வீட்டில் தாக்குதல் நடத்தியது.

மாநிலங்களவையில் இன்று பாராளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்து மீடியாக்களில் வெளியாகியது மற்றும் நரேஷ் அகர்வால் வீட்டில் பா.ஜனதாவின் தாக்குதலில் ஈடுபட்ட விவகாரங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. மாநிலங்களவை துணை சபாநாயகர் பிஜே குரியன் இப்பிரச்சனையில் கவனம் செலுத்துவதாகவும், உரிய ஆதாரங்களுடன் நோட்டீஸ் வழங்குமாறும் எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக் கொண்டார். ஆதாரங்களுடன் நோட்டீஸ் கொடுங்கள், நான் நடவடிக்கையை எடுப்பேன், என்றார் குரியன்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சேகர் ராய், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த் சர்மா உள்ளிட்ட எம்.பி.க்கள், பாராளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்களை வெளியிட்ட பத்திரிக்கைகள், செய்தி தொலைக்காட்சிகளுக்கு எதிராக உடனடியாக உரிமை மீறல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். நான் உடனடி காபி போன்று உடனடியாக எல்லாம் செயல்பட முடியாது. நோட்டீஸ் ஆய்வு செய்யப்பட வேண்டும். நோட்டீஸ் வழங்குங்கள், விவகாரம் இன்று அவைக்குவரும், என்றார் குரியன்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியின் காரணமாக குரியன் பேசுகையில், நீக்கப்பட்ட கருத்துக்கள் பத்திரிக்கைகளில் வெளியிட முடியாது, நீக்கப்பட்ட கருத்தை அடிப்படையாக கொண்டு யாரும் வழக்கும் பதிவு செய்ய முடியாது என்றார். சமாஜ்வாடி உறுப்பினர் நரேஷ் அகர்வால் பேச்சு குறித்து பாரதீய ஜனதாவினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு மீரட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எம்.பி.யின் வீடு தாக்கப்பட்டு இருந்தால் மத்திய அரசு விசாரிக்க வேண்டும், நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார் குரியன். ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்பில் உடனடியாக நடவடிக்கை தேவை என அமளி ஏற்படுத்தப்பட்டது.

இது தொடர்பான எதிர்க்கட்சிகள் அமளியின் காரணமாக காலை அவை தொடங்கியதும் முதலில் 15 நிமிடமும், இரண்டாவது 12 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com