

புதுடெல்லி
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நாளை தொடங்கி 18-ந்தேதி வரையிலான 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
இதேபோன்று, அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு முன் மொழிந்து உள்ளது.
இந்த மசோதாக்கள் நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. எனினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் ஒன்றும் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.
இந்த நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவின் இல்லத்தில், அனைத்து கட்சியினர் பங்கேற்ற கூட்டம் இன்று நடந்தது. இதில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ராஷ்டீரிய ஜனதா தள செயல் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே மற்றும் இந்தியா கூட்டணியின் பிற முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அரசியல் உள்நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது என குற்றச்சாட்டாக கூறினார். தொடர்ந்து அவர், நாங்கள் அனைவரும் மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.
நாங்கள் அதற்கு தொடர்ந்து ஆதரவளித்தபோதும், அதன் ஆரம்பகட்ட சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆனால், தொகுதி மறுவரையறையை வைத்து அவர்கள் சில தந்திர விளையாட்டுகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். இந்த மசோதாவை நாங்கள் எதிர்ப்போம். ஆனால், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதாவுக்கு எதிராக இருக்க மாட்டோம் என்றார். இந்த மசோதா பா.ஜ.க.வின் கையில் கிடைத்த ஆயுதம் என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கவலை தெரிவித்து உள்ளார்.
இதனால், நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடரில் கடும் அமளி இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது.