

காந்திநகர்,
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள கம்பாலா கிராமத்தை சேர்ந்த சோனு ரபாரி(வயது 19) என்ற இளம்பெண்ணும், நவீன் ஜீவாபாய்(வயது 21) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு சோனு ரபாரியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3-ந்தேதி சோனு ரபாரி-நவீன் ஜீவாபாய் ஜோடி காணாமல் போனதாக நாகத்ரானா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில், சோனு ரபாரியின் குடும்பத்தினர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மகளின் காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது போலீசாருக்கு தெரியவந்த நிலையில், இளம் ஜோடி காணாமல் போன விஷயத்தில் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், சோனு ரபாரியின் குடும்பத்தினர் உண்மையை ஒப்புக்கொண்டனர். அதன்படி, சம்பவத்தன்று சோனுவின் தந்தை, தம்பி மற்றும் உறவினர் ஒருவர் என 3 பேர் சேர்ந்து இளம்பெண் சோனு மற்றும் அவரது காதலன் நவீனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து, அவர்களின் காதலை கைவிடுமாறு மிரட்டியுள்ளனர்.
ஆனால் அந்த காதல் ஜோடி இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சோனுவின் குடும்பத்தினர், சோனு மற்றும் நவீனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரின் உடல்களையும் அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மகளை காணவில்லை என போலீசில் புகார் கூறியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட கிணற்றில் இருந்து சோனு-நவீனின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சோனுவின் தந்தை, சோனுவின் தம்பி மற்றும் ஒரு உறவினர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோனுவின் தாயும் இந்த கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.