

புதுடெல்லி,
வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளக்கட்சி தலைவரான லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி ஆகியோர் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து வலுவான எதிர்க்கட்சியை உருவாக்கியுள்ளனர்.
மக்களவைத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடத்தப்படும் போர் என எதிர்க்கட்சியின் கூட்டணிகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, பிரதமருக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவரே முன்னிலை நிறுத்தப்படுவார் எனக் கூறியுள்ளார். இதனிடையே காங்கிரஸ் கட்சி தலைமையில் ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிவுக்கு பிறகே பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், 2019-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி அல்லது அவரது மகள் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.