

புதுடெல்லி,
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சபை 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக்கொண்டது. இந்த அரசியலமைப்பு 1950 ஜனவரி 26-ம் தேதி செயல்பட்டிற்கு வந்தது.
இதனை தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இந்த ஆண்டு அரசியலமைப்பு தினம் இன்று (நவ.26) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பாராளுமன்றத்திலுள்ள மைய அரங்கத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற உள்ள அரசியலமைப்பு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளும் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களை புறக்கணித்துள்ளன.