ரெயில் தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட தம்பதிக்கு ரூ.63,199 இழப்பீடு வழங்க உத்தரவு

தகுந்த ஆதாரமின்றி மூடுபனியைக் காரணமாக கூறுவதை ஏற்க முடியாது என திட்டவட்டமாக ஆணையம் தெரிவித்தது.
ரெயில் தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட தம்பதிக்கு ரூ.63,199 இழப்பீடு வழங்க உத்தரவு
Published on: 

ஸ்ரீநகர்,

ரெயில் தாமதமாக வந்ததால் இணைப்பு விமானத்தை தவறவிட்ட தம்பதிக்கு ரூ.63,199 இழப்பீடு வழங்குமாறு வடக்கு ரெயில்வேக்கு ஜம்மு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரெயில் பயணம்

ஜம்முவை சேர்ந்த மோகித் சிங் பாவு மற்றும் அவரது மனைவி தமினி பில்லோரியா ஆகியோர், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜம்முவிலிருந்து டெல்லி செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர். மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு டெல்லி சென்றடைய வேண்டிய அந்த ரெயில், சுமார் 4 மணி நேரம் தாமதமாக காலை 7.50 மணிக்கு தான் டெல்லி சென்றடைந்தது.

கூடுதல் செலவு

இதனால், அன்று காலை 7.15 மணிக்கு டெல்லியிலிருந்து குவாஹாத்தி செல்ல வேண்டிய இணைப்பு விமானத்தை அந்த தம்பதியால் பிடிக்க முடியாமல் போனது. வேறு வழியின்றி புதிய விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.35,699-ம், டெல்லியில் தங்கியதற்காக ரூ.2,500-ம் என மொத்தம் ரூ.38,199 அவர்களுக்கு கூடுதல் செலவானது.

இழப்பீடு கோரி வழக்கு

இதையடுத்து, ரெயில்வேயின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட நிதி இழப்புக்கு ரூ.60 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.30 ஆயிரம் என இழப்பீடு கோரி ஜம்மு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

மூடுபனி வாதம் நிராகரிப்பு

இந்த வழக்கை விசாரித்த ரெயில்வே தரப்பு, கடுமையான மூடுபனி காரணமாகவே ரெயில் தாமதமானதாகவும், விதிமுறைகளின்படி இதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் வாதிட்டது. ஆனால், உரிய காலத்தில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்காததோடு, மூடுபனியால் தான் ரெயில் தாமதமானது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் ரெயில்வே நிர்வாகம் சமர்ப்பிக்கவில்லை என்பதை ஆணையம் சுட்டிக்காட்டியது.

ரூ.63,199 இழப்பீடு உத்தரவு

தகுந்த ஆதாரமின்றி மூடுபனியை காரணமாக கூறுவதை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த ஆணையம், தம்பதியினருக்கு ஏற்பட்ட செலவு தொகை ரூ.38,199-ஐ 7.5 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மன உளைச்சலுக்கு ரூ.20 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.63,199 இழப்பீட்டை 6 வாரங்களுக்குள் வடக்கு ரெயில்வே வழங்க வேண்டும் என ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

X