

புதுடெல்லி,
அருங்காட்சியகங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவிடங்கள் ஆகியவை மத்திய தொல்லியல் துறை மற்றும் அந்தந்த மாநிலங்களின் மாநில தொல்லியல் துறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் 3,686 நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள பகுதிகளில் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து தற்போது மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை, அடுத்த உத்தரவு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய தொல்லியல் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெர்விக்கப்பட்டுள்ளது.