மதரசா பள்ளி பாடத்திட்டம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

கர்நாடகத்தில் மதரசா பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
மதரசா பள்ளி பாடத்திட்டம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி
Published on

பெங்களூரு:

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் மடிக்கேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கல்வி கிடைப்பது இல்லை

கர்நாடகத்தில் உள்ள மதரசா பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பிற கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படும் கல்வி கிடைக்க வேண்டும். அதன் அடிப்படையில் மதரசா பள்ளிகளில் கற்பிக்கப்படும் கல்வி குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கர்நாடகத்தில் 106 அரசு உதவி பெறும் அரபிக் பள்ளிகள் மற்றும் 80 தனியர் அரபிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

அந்த பள்ளிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டம் பள்ளி கல்வித்துறையால் முடிவு செய்யப்பட்ட பாடத்திட்டம் கிடையாது என்று புகார்கள் எழுந்துள்ளன. அதனால் இதுபற்றி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அங்கு அறிவியல் உள்ளிட்ட சில பாடங்கள் கற்பிக்கப்படுவது இல்லை. அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பிற பள்ளிகளில் கிடைக்கும் கல்வி கிடைப்பது இல்லை.

சேர்க்கை எண்ணிக்கை

கர்நாடகத்தில் அரபிக் பள்ளிகளில் ஆண்டுதோறும் 27 ஆயிரம் குழந்தைகள் சேருகிறார்கள். ஆனால் அவர்களில் 2 ஆயிரம் பேர் மட்டும் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து சான்றிதழ் பெறுகிறார்கள். பல பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை எண்ணிக்கைக்கும், வகுப்புக்கு ஆஜராகும் எண்ணிக்கைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. இவ்வாறு இருக்க கூடாது.

பள்ளி பாடத்திட்டங்களில் கெம்பேகவுடா, மைசூரு மன்னர்களின் ஆட்சி நிர்வாக முறைகள் குறித்த வரலாறு உரிய அளவில் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக திப்பு சுல்தான் போன்றோரின் வரலாறு தான் அதிகளவில் சேர்க்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு, உள்ளூர் அளவில் ஆட்சி செய்த மன்னர்கள் சிறப்பான நிர்வாகத்தை நடத்தினர். சீரிய முறையில் நகரங்களை உருவாக்கினர். ஏரி, குளங்களை அமைத்தனர். அதுபற்றி மக்களுக்கு எடுத்து கூறப்படவில்லை.

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com