மத்திய அரசுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும்: விவசாய சங்க நிர்வாகி தகவல்

உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம், மத்திய அரசுடன் மட்டுமே பேசுவோம் என்று விவசாய சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும்: விவசாய சங்க நிர்வாகி தகவல்
Published on

புதுடெல்லி,

திருத்தப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் ஏறத்தாழ இரு மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இதுவரை 8 கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தியது.

ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் உள்ளது. இந்த நிலையில், விவசாயிகள்- மத்திய அரசு இடையே இன்று 9-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த விவசாய சங்க நிர்வாகி ரகேஷ் திகாய்த், குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் மற்றும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகள் அப்படியே உள்ளன. உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டோம். மத்திய அரசுடன் மட்டுமே பேசுவோம் என்றார்.

அதேபோல், வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: - விவசாயிகளுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக இல்லை. வரும் 19 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். கடுமையான குளிரிலும் விவசாயிகள் போராடுவது அரசுக்கு கவலை அளிக்கிறது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com