புதுவையில் பா.ஜ.க. ஆட்சி அமைய பாடுபடுவதே நமது இலக்கு; புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் சபதம்

புதுவையில் பா.ஜ.க. ஆட்சி அமைய பாடுபடுவதே நமது இலக்கு ஆகும் என்று நமச்சிவாயம் கூறினார்.
நமச்சிவாயம்
நமச்சிவாயம்
Published on

செயல்வீரர்கள் கூட்டம்

பா.ஜ.க. அரியாங்குப்பம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று தவளக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

பா.ஜ.க. ஆட்சியே நமது இலக்கு

பா.ஜ.க. புதுவை மாநிலத்தில் தற்போது தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகி வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பா.ஜ.க. இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. நமது இலக்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது தான். இதற்காக ஒவ்வொரு தொண்டரும் பா.ஜ.க. அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும். தற்போது எதிர்கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. எனவே தான் தேர்தல் வரும் நேரத்தில் மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை கையில் எடுக்கின்றனர்.

எதுவும் செய்யவில்லை

நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக சுஷ்மா சுவராஜ் இருந்த போது அவர் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க தகுதி உள்ளதாக கூறினார். அந்த காலகட்டத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சராக இருந்த ரங்கசாமியும் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்தினார். அப்போது மத்திய மந்திரியாக இருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற்று கொடுத்தாரா? கிடையாது.

புதுவையில் தற்போது கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் கூறி வருகிறார். கவர்னருக்கு உள்ள அதிகாரத்தை வாங்கி கொடுத்தது அவர் தான். நீதிமன்றத்திற்கு சென்று கவர்னருக்கு உள்ள அதிகாரத்தை சட்டப்படி பெற்று கொடுத்தார்.

எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும், முதல்-அமைச்சராகவும் இருந்து அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது என மக்கள் முடிவு செய்து விட்டனர். மக்களின் ஆதரவுடன் 2021-ம் ஆண்டு புதுவையில் பா.ஜ.க. ஆட்சி அமைய சபதம் ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தங்க விக்ரமன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com