‘எங்கள் இதயம் கிட்டத்தட்ட நின்று விட்டது’ - ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் நெகிழ்ச்சி

நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்தியபோது எங்கள் இதயம் கிட்டத்தட்ட நின்று விட்டது என்று ‘இஸ்ரோ’ தலைவர் கே. சிவன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
‘எங்கள் இதயம் கிட்டத்தட்ட நின்று விட்டது’ - ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் நெகிழ்ச்சி
Published on

பெங்களூரு,

சந்திரயான்-2 விண்கலம், நேற்று காலை நிலவின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதற்கான பணி பெங்களூருவில் உள்ள தரை கட்டப்பாட்டு மையத்தில் இருந்து மிக நேர்த்தியாக திட்டமிட்டபடி செய்து முடிக்கப்பட்டது.

இது சந்திரயான்-2 விண்கல திட்டத்தில் ஒரு முக்கியமான கட்டம் ஆகும்.

இதைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:-

சந்திரயான்-2 விண்கலத்தை நிலவின் சுற்று வட்டப்பாதையில் செலுத்துகிற பணி நடைபெற்ற 30 நிமிடம், எங்கள் இதயம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இந்தப்பணி 9.02 மணிக்கு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

செப்டம்பர் 7-ந் தேதி, நிலவின் தென்துருவப்பகுதியில் விண்கலம் மெதுவாக தரை இறங்குகிற தருணம், உச்ச கட்ட பரபரப்பு தருணமாக இருக்கப்போகிறது. ஏனென்றால் இது, இதுவரை இஸ்ரோ செய்யாத ஒரு பணியாகும்.

இப்போது எங்கள் பதற்றம் மேலும் அதிகரித்து இருக்கிறதே தவிர குறையவில்லை.

நாங்கள் போதுமான அளவுக்கு சோதனைகளை செய்திருக்கிறோம். ஒவ்வொன்றையும் நேர்த்தியாக செய்து முடித்துள்ளோம். மனித சக்தியால் சாத்தியமாகிற அனைத்தையும் செய்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

நிலவின் தென் துருவப்பகுதியில் சந்திரயான்-2 இருக்கிறபோது, நிலவில் நீர் மூலக் கூறுகள் இருக்கின்றன, தனித்துவமான ரசாயன கலவைகளை கொண்ட புதிய பாறை வகைகள் இருக்கின்றன என்று சந்திரயான்-1 செய்த கண்டுபிடிப்புகள் ஆராயப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com