

புதுடெல்லி,
டெல்லியில் போராட்டத்தை வாபஸ் பெற்றது ஜனதா கட்சி
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், கடந்த மே மாதம் 15-ந் தேதி நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது, சில வேலையற்ற இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்த கருத்தை நையாண்டி செய்யும் விதமாக பலர் சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதன் வெளிப்பாடாக உருவானதுதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.
இந்த கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கே, மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரை சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அவர், தலைமை நீதிபதியின் கருத்தை சுட்டிக்காட்டி, "அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்?" என்று பதிவிட்டு இருந்தார். இந்த கருத்து 'ஜென் ஸி' மற்றும் 25 வயதிற்கு உள்பட்ட இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்றன.
"தனியாக ஒரு தளத்தை உருவாக்க வேண்டும்" என்று பலர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்று ஆன்லைன் நையாண்டி அரசியல் அமைப்பு உருவானது.
இவ்வாறு நையாண்டி கட்சியாக உருவான கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி சீரியசான ஒரு பிரச்சினையை கையில் எடுத்தது. அதாவது, நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறி, தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர், நீட் மறுதேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டாலும், நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் என்ற முழக்கத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்தது.
இந்த கோரிக்கையை முன்னிறுத்தி, கடந்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை தொடங்கினர்.
இதற்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி "சலோ சன்சாத்" என்ற பெயரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 20 ஆயிரம் பேர் டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்தனர்.
தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற நிலையில் தர்மேந்திர பிரதான் தனது மத்திய மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில் மத்திய அரசுடன் 3 கட்ட பேச்சுவார்த்தையில் சிஜேபி கட்சியினர் ஈடுபட்டனர். அதில்,
டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும். நீட் தேர்வு ரத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து சிஜேபின் பிற கோரிக்கைகளையும் ஏற்றது மத்திய அரசு. பேச்சுவார்த்தைக்குப் பின் மத்திய மந்திரிகள் சிஜேபியினர் கூட்டாக ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அதில்
3ம் கட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் 3 முக்கிய கோரிக்கைகளையும் அரசு ஏற்பதாக உறுதி அளித்ததால்
நாடு முழுவதும் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மத்திய அரசுடன் 3 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. 4 வாரங்களில் மத்திய அரசுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா கூறுகையில், "நாங்கள் அரசாங்கக் குழுவினருடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். பல நாட்களாக ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த எங்கள் போராட்டத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், போராட்டக்காரர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும், மேலும் போராட்டக்காரர்கள் அல்லது அமைப்பாளர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படக்கூடாது. எங்கள் மூன்றாவது கோரிக்கை, நீட் தேர்வு நடத்தப்படாததால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது. சற்று முன்புதான் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதன் மூலம் எங்கள் முதல் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என்றார்.
கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன; போராட்டத்தில் ஈடுபடுவோர் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு அமைதியாக வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.எங்கள் எதிர்காலத் திட்டம் அல்லது பிற விஷயங்கள் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம் என கரப்பான் ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை (ஜூலை 26ம் தேதி) நாடு தழுவிய போராட்டத்துக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்தநிலையில் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால் நாளை மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த அழைப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 50 நாட்களாக நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நிறைவுக்கு வந்தது.