

மும்பை
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் புதிதாக 1,32,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,74,350 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,713 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,40,702 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,07,071 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,65,97,655 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 16,35,993 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்றும் மட்டும் மராட்டிய மாநிலத்தில் 650 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை இப்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
நேற்று வரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் குறைந்தது 100,233 பேர் மாநிலத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த இறப்புகளில் ஏறக்குறைய பாதி பிப்ரவரி 15 க்குப் பிறகு நடந்துள்ளது, இரண்டாவது அலையின் போது இன்னும் அதிகமாகி உள்ளது.
அடுத்த இடத்தில் கர்நாடகா உள்ளது கர்நாடகாவில் 30 ஆயிரத்து 531 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் 25,665, டெல்லி 24,447, உத்தரபிரதேச்சம், 20,895, மேற்கு வங்காளம் 15,921, பஞ்சாப் 14, 840, சத்தீஸ்கார் 13,139, ஆந்திரா 11,213, குஜராத் 9,890 இறப்புகளை சந்தித்து உள்ளன.
நாடு முழுவதும் இறப்புகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் . ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் இன்றுவரை 3.4 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளில் 30 சதவீதத்தை மராட்டியம் கொண்டுள்ளது.
மாநிலத்தில், மும்பை மற்றும் புனே நகரங்கள் அதிகபட்ச இறப்புகளைப் பதிவு செய்துள்ளன. மும்பையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ நெருங்குகிறது, புனேவில் இது 12,700 ,தானே (8,000 க்கும் அதிகமானோர்) மற்றும் நாக்பூர் (6,500 க்கும் அதிகமானோர்) பலியாகி உள்ளனர்.