இந்தியாவில் 1 லட்சத்து 843 ஓராசிரியர் பள்ளிகள்: தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் 1 லட்சத்து 843 ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. அதிகபட்சமாக, ஆந்திராவில் 16,357 பள்ளிகள் உள்ளன.

ஆங்கில கல்வி மோகம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும், தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கில வழிக் கல்வியை கொடுக்கவே அதிகம் விரும்புகின்றனர். உயர்கல்விக்கு ஆங்கிலம் முக்கியம் என்பதால், ஆரம்ப பள்ளி முதலே ஆங்கில வழிப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர்.

தமிழகம் உள்பட பெரும்பாலான மாநில அரசு பள்ளிகளில், மாநில மொழிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகின்றன. இதனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் குறைந்து வருகிறது.

ஓராசிரியர் பள்ளிகள் விவரம்

இந்த நிலையில், கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு 2025-2026-ம் ஆண்டில், பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றிய தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் 1 லட்சத்து 843 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதில், ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு, 16,357 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இது ஒட்டுமொத்த தேசிய சராசரியில் 16 சதவீதமாகும். 2-வது இடத்தில் ஜார்கண்ட் மாநிலமும், 3-வது இடத்தில் மராட்டிய மாநிலமும் உள்ளது.

ஜார்கண்டில் 9,827 பள்ளிகளும், மராட்டியத்தில் 9,269 பள்ளிகளிலும் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கிவருகின்றன.

தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?

இதேபோல், கர்நாடகாவில் 8,042 பள்ளிகளும், உத்தரபிரதேசத்தில் 7,874 பள்ளிகளும், ராஜஸ்தானில் 7,200 பள்ளிகளும், மேற்கு வங்காளத்தில் 6,769 பள்ளிகளும் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன.

மேலும், தெலுங்கானாவில் 4,793 பள்ளிகளும், தமிழகத்தில் 3,957 பள்ளிகளும், அசாமில் 3,159 பள்ளிகளும், இமாச்சலபிரதேசத்தில் 3,128 பள்ளிகளும், உத்தரகாண்டில் 2,655 பள்ளிகளும், சத்தீஸ்கரில் 2,461 பள்ளிகளும் இந்த பட்டியலில் வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு 9-வது இடத்தில் உள்ளது.

குறைவாக உள்ள மாநிலங்கள்

நாட்டிலேயே மிகக் குறைவாக, கேரளாவில் 67 பள்ளிகளும், நாகாலாந்தில் 35 பள்ளிகளும், சிக்கிமில் 31 பள்ளிகளும், லடாக்கில் 28 பள்ளிகளும், டெல்லியில் 7 பள்ளிகளும், அந்தமான் நிகோபர் தீவில் 1 பள்ளியும் ஒரு ஆசிரியருடன் இயங்கி வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com