அதிர்ச்சி சம்பவம்; ஒரே கிராமத்தில் 100 தெருநாய்கள் விஷ ஊசி செலுத்தி கொலை!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சுமார் 100 தெருநாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி சம்பவம்; ஒரே கிராமத்தில் 100 தெருநாய்கள் விஷ ஊசி செலுத்தி கொலை!
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சுமார் 100 தெருநாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தெலுங்கானாவின் சித்திப்பேட் மாவட்டம் திகுல் கிராமத்தில் மார்ச் 27ம் தேதி நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர், கிராம தலைவர் மீது புகார் அளித்துள்ளார்.

அங்குள்ள கிராம தலைவர், நாய் பிடிப்பவர்களை வரவழைத்து அவர்கள், தெரு நாய்களை விஷ ஊசி போட்டு பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர், ஐதராபாத்திலுள்ள விலங்குகள் நல மையத்துக்கு தகவல் கொடுத்ததையடுத்து, மாவட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், இறந்த நாய்களில் உடல்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு பழைய கிணற்றில் புதைக்கப்பட்டன என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். கடந்த 3 மாதங்களில் இதுவரை 200க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அப்பகுதி போலீசிடம் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட எஸ்.பி மற்றும் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 11(1)சி இன் படி, எந்த விலங்குகளையும் (தெரு நாய்கள் உட்பட) விஷம் முறையைப் பயன்படுத்தி, அல்லது வேறு ஏதேனும் தேவையற்ற கொடூரமான முறையில் எந்த மிருகத்தையும் கொல்வது குற்றமாகும்.

இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

முன்னதாக, 2019ம் ஆண்டு, சித்திப்பேட்டை நகரில், நகராட்சி ஊழியர்களால் சுமார் 100 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் விலங்கு பிரியர்களிடம் கடும் கோபத்தை தூண்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com