பிஎப்ஐ தலைவர்கள், உறுப்பினர்கள் மீது 1,400 வழக்குகள்

தடை செய்யப்பட்டு உள்ள பிஎப்ஐ மீது நாடு முழுவதும் 1400 க்கும் மேற்பட்ட இப்போது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
பிஎப்ஐ தலைவர்கள், உறுப்பினர்கள் மீது 1,400 வழக்குகள்
Published on

புதுடெல்லி

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சேவை அமைப்பாக 'பி.எப்.ஐ.' என்று அழைக்கப்படுகிற 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பு தொடங்கப்பட்டது.

ஆனால் இந்த அமைப்பு பயங்கரவாதச்செயல்களை அரங்கேற்ற நிதி உதவி அளித்து வருகிறது, வன்முறைக்கு துணை போகிறது, மதக்கலவரத்தைத் தூண்டுகிறது என புகார்கள் எழுந்தன.

இந்த புகார்களைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ., கடந்த 22-ந்தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் பி.எப்.ஐ. அமைப்பின் அலுவலகங்கள், அவற்றின் நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடி சோதனைகளை நடத்தியது. 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தது.

இதைக்கண்டித்து கேரள மாநிலத்தில் மறுநாளில் (23-ந்தேதி) முழு அடைப்பு, பேரணி நடத்தப்பட்டதும், அதில் ஆங்காங்கே வன்முறைக்காட்சிகள் நடந்ததும் நினைவுகூரத்தக்கது.

மேலும், நேற்று முன்தினம் 2-வது நாளாக உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட 8 மாநிலங்களில், அந்தந்த மாநில போலீஸ் சார்பில் அதிரடி சோதனைகள் நடத்தி, 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், ஐ.எஸ். போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் பி.எப்.ஐ. அமைப்பு தொடர்பில் உள்ளது என்று கூறி, அந்த அமைப்பை மத்திய அரசு நேற்று 5 ஆண்டு காலத்துக்கு அதிரடியாக தடை செய்தது.

பி.எப்.ஐ. அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படுகிற 8 அமைப்புகள் மீதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பி.எப்.ஐ. அமைப்பினை தடை செய்வதற்கு உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத் மாநில அரசுகள் பரிந்துரை செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

பி.எப்.ஐ. அமைப்பையும், அதன் துணை அமைப்புகளையும் மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பி.எப்.ஐ. அமைப்பின் தலைவர் ஓ.எம்.ஏ. சலாம், பொதுச்செயலாளர் அனிஸ் அகமது, தேசிய செயற்குழு உறுப்பினர் பி.கோயா, துணைத்தலைவர் இ.எம்.அப்துர் ரகுமான், செயலாளர் அப்துல் வாகித் சேட் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர்.

தடை செய்யப்பட்டு உள்ள பிஎப்ஐ மீது நாடு முழுவதும் 1400 க்கும் மேற்பட்ட இப்போது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com