ஆந்திராவில் வலிப்புடன் கூடிய மர்ம நோய் 500க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி,ஒருவர் பலி

ஆந்திராவில் வலிப்புடன் கூடிய மர்ம நோய் தாக்கியதால் 500க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகிறது.
Image courtesy : The hindu
Image courtesy : The hindu
Published on

எலுரு

ஆந்திரா மாநிலத்தில் எலுரு நகரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகிறது, செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் 500 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அதிகாரிகளின் தகவல் படி கடந்த நான்கு நாட்களில் (டிசம்பர் 5 முதல்) 525 நோயாளிகள் கால்-கை வலிப்பு, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வலிப்பு வந்து நோயாளிகள் திடீரென மயங்கி விழுந்தனர். நோயாளிகள் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் வருவதாக புகார் கூறினர். கடந்த 12 மணி நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று ஒரு டாக்டர் கூறினார்.

எலுரு அரசு பொது மருத்துவமனையில்171 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 354 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் 22 பேர் விஜயவாடா மற்றும் குண்டூர் மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேற்கு கோதாவரி மாவட்ட இணை ஆட்சியர் ஹிமான்ஷு சுக்லா தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது மொத்தத்தில், 73 பேர் ஒன்று முதல் பன்னிரண்டு வயது வரையிலும், 288 நோயாளிகள் 12 முதல் 35 வயது வரையிலும், 169 பேர் 35 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர். மீட்பு சதவீதம் நன்றாக உள்ளது என கூறினார்.

இதற்கிடையில், மர்ம நோய் எலுரு நகரம் மற்றும் அண்டை கிராமங்களில் உள்ள பிற காலனிகளுக்கும் பரவி வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

முதல் மூன்று நாட்களில், தட்சிணா வீதி, அருந்ததி பெட்டா, அசோக் நகர், தூர்பூ வீதி, கோத்தாபேட்டா மற்றும் பிற பகுதிகளிலிருந்து பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் செவ்வாயன்று, டெண்டுலூரு கிராமத்தில் இருந்து ஒரு சில பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் மங்களகிரி, இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், நோய்க்கான காரணத்தை இதுவரை அடையாளம் கண்டறியமுடியவில்லை என்று கூறினார்.

இதற்கிடையில், எலுரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவர்களுக்கு உதவி செய்வதாக ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நெருக்கடியைக் கையாள, 3 நுண்ணுயிரில் நிபுணர்கள், உட்பட 56 மருத்துவர்கள் 136 செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இருபது ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. 62 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எலுரு அரசு மருத்துவமனை உட்பட நான்கு மருத்துவமனைகளில் மொத்தம் 445 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எலுரு அரசு மருத்துவமனையில் 12 மருத்துவர்கள், 4 ஆம்புலன்ஸ்கள், 36 நர்சிங் ஊழியர்களுடன் 50 கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரி அறிக்கைகள் முடிவுகள் "இயல்பானவை" என தெரியவந்து உள்ளது. அது நீர் மாசுபடுவதாக சந்தேகத்தை நிவர்த்தி செய்தது என தலைமை மருத்துவ அதிகாரி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com