கேரளாவில் இயல்பு நிலை திரும்புகிறது; பல இடங்களில் பேருந்து, ரயில் போக்குவரத்து துவக்கம்

கேரளாவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. மாநிலத்தில் பல இடங்களில் பேருந்து, ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது. #KeralaFloods2018
கேரளாவில் இயல்பு நிலை திரும்புகிறது; பல இடங்களில் பேருந்து, ரயில் போக்குவரத்து துவக்கம்
Published on

திருவனந்தபுரம்,

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில், தென்மேற்கு பருவமழை நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தெடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 8,000 வீடுகள் இடிந்துள்ளன. 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 40,000 ஹெக்டேர் பயிர்கள் அழுகியுள்ளன. 134 பாலங்கள் இடிந்துள்ளன. 16,000 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன. ரூ.21,000 கோடிக்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை சற்று ஓய்ந்துள்ளது. இதனால் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. நிலைமை சீரடைந்து வரும் பகுதிகளில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மலப்புரம் மாவட்டங்களின் சில இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.பலத்த மழையால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், மாற்று ஏற்பாடாக அங்குள்ள கடற்படை விமான தளத்தில் பயணிகள் விமான போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்படை தளத்தில் முதல் பயணிகள் விமானம் இன்று காலை தரையிறங்கியது.

இதனால் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொச்சிக்கு நேரடியாக நிவாரணப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் கொச்சி கடற்படை விமானதளத்தில் தரையிறங்கியது. பல மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்கள் கொச்சி பகுதியில் விநியோகம் செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com