

சண்டிகர்,
இந்தியாவில் இருந்து 76 நாடுகளுக்கு 6 கோடி கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் 4 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளன என மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சண்டிகரில் உள்ள மைக்ரோபியல் டெக்னாலஜி நிறுவனத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன், நாடு முழுவதும் இதுவரை சுமார் 4 கோடி கொரோனா டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து 76 நாடுகளுக்கு 6 கோடி கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளை விரைவுபடுத்துவதற்காக ரூ.900 கோடிக்கு மேலான ஒரு சிறப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று நமது பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும் கூறியிருக்கின்றனர். அதை நாம் செயல்படுத்திக்காட்ட வேண்டும். அதேபோல, இந்த கொரோனா காலத்தில் விஞ்ஞானிகள் சமூகத்துக்கு நிறைய அனுபவம் கிட்டியிருக்கிறது. இந்த நெருக்கடி வேளையில் அவர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, நமக்கு பெரிய அளவில் உதவியிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இதுபோல ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
விஞ்ஞானிகளுக்கு, மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை வேண்டும். ஆய்வகத்தில் செய்யும் எதுவும், எதிர்காலத்தில் மக்களுடன் தொடர்புகொள்வதாக இருக்க வேண்டும். பொதுவாக ஒரு நல்ல யோசனை கொண்டுள்ளவர்களுக்கு, அதை தொழில்முனைவு வாய்ப்பாக மாற்ற நினைப்பவர்களுக்கு, அதன் மூலம் மக்களுக்கு உதவ முயல்பவர்களுக்கு மோடி அரசு பின் நிற்கும். அதன் அடிப்படையில்தான், ஸ்டார்ட்-அப் அண்ட் ஸ்டாண்ட் அப் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.