

டேராடூன்,
70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு அடுத்த மாதம் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்பதால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் ருத்ரபிரயாங் பகுதியில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அமித்ஷா, இஸ்லாமிய மத பெண்களை திருமணம் செய்துவிட்டு அவர்களது கணவர்கள் தலாக் தலாக் தலாக் என கூறி பிரிந்து சென்றனர். முத்தலாக் சட்டத்தை பிரதமர் மோடி ஒழித்தார். பெண்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க 700-க்கும் அதிகமான விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.