காசிரங்கா தேசிய பூங்காவில் அதிவேக வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்; தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

காசிரங்கா தேசிய பூங்காவிற்குள் அதிவேகமுடன் செல்லும் வாகனங்கள் சுற்று சூழலுக்கான இழப்பீட்டு தொகையாக ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காசிரங்கா தேசிய பூங்காவில் அதிவேக வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்; தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள அசாமில் வனவிலங்குகளுக்கான காசிரங்கா தேசிய பூங்கா உள்ளது.

இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன் காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குநர் இன்று ஆஜரானார். அவர், தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஸ்வதேந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில், இந்த வருட ஜனவரியில் இருந்து இதுவரை பூங்காவில் 4 விலங்குகள் உயிரிழந்துள்ளன.

விலங்குகளின் இதுபோன்ற இறப்புகளை தடுக்கும் வகையில் வேக கட்டுப்பாட்டு தானியங்கி உணர்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டும் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், இதுபோன்ற இறப்புகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். அதிவேகமுடன் செல்லும் ஒவ்வொரு வாகனத்திற்கும் வழக்கம்போல் விதிக்கப்படும் அபராதத்துடன், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சுற்று சூழல் இழப்பீட்டு தொகையாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

வாகன மோதலினால் இறந்த விலங்குகளின் எண்ணிக்கை பற்றி தகவல் அளிக்கும்படியும் அசாம் மாநில அரசு மற்றும் காசிரங்கா தேசிய பூங்கா இயக்குநரிடம் நீதிபதி அமர்வு கேட்டு கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com